ஆளுக்கொரு விதியா? கேப்டன் கோலி குறித்து முன்னாள் வீரரின் பாய்ச்சல்!!
- IndiaGlitz, [Tuesday,December 22 2020] Sports News
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியினி கேப்டன் விராட் கோலி போட்டியில் இருந்து விலகுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மற்ற 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி ஆட மாட்டார். இந்நிலையில் கேப்டன் பொறுப்பு வகிக்கும் இவருக்கு மாற்றாக யார் இருப்பார் என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது.
டெஸ்ட் போட்டியின் துவக்கத்தில் இருந்தே விராட் கோலி அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி வெளியாகி வந்தது. இதையடுத்து பலரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் “சுனில் கவாஸ்கர் தன் மகனை பல மாதங்கள் கழித்தப் பிறகே பார்க்க முடிந்தது. ஆனால் விராட் கோலியின் இந்த முடிவை மதிக்கிறேன்” என்ற ரீதியில் கபில்தேவ் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு சாம்பவானான சுனில் கவாஸ்கர் தற்போது கோலியின் செயல் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறைகள் தனக்கு வியப்பை அளிப்பதாகத் தெரிவித்து உள்ளார். அதாவது கேப்டனுக்கு ஒரு விதி, புதிய வீரருக்கு ஒரு விதியாக என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார். இந்திய அணியின் தற்போதைய வெற்றிச் சின்னமாகக் கருதப்படும் தமிழக வீரர் நடராஜனுக்கு முதல் குழந்தை பிறந்து இருக்கிறது. அவர் ஐபிஎல் விளையாடும்போதே இந்த தகவல் வெளியானது.
ஆனால் ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்ட நடராஜன் இந்தியாவிற்கு வராமல் அப்படியே ஆஸ்திரேலியா சென்று விட்டார். இந்நிலையில், “அணி நிர்வாகத்தின் விதிகள் குறித்து இன்னொரு வீரரும் ஆச்சரியப்படுவார். ஆனால் அவர் இது குறித்து எதுவும் பேச முடியாது. காரணம் அவர் புதிதாக அணிக்கு வந்தவர். அவர் டி.நடராஜன். இடது கை யாக்கர் ஸ்பெலிஸ்ட் டி20 யில் மிகப் பிரமாதமாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதையும் கூட டி.நடராஜனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு டி.நடராஜன் பவுலிங்க் அமைந்தது. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றின்போதே முதல் குழந்தைக்குத் தந்தையானார். ஐபிஎல் முடிந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார். அவரது அபாரமான பந்து வீச்சை பார்ந்த்த பிறகு டெஸ்ட் தொடருக்கு அவரை அங்கேயே தங்க வைத்தனர். ஆனால் அணியில் பங்கு பெறுவதற்கு அல்ல. மாறாக வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்காக.
இதைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு வடிவத்தில் மேட்ச் வின்னரான அவர் இன்னொரு வடிவத்தில் வலைப்பந்து வீச்சாளர். இவர் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகே இந்தியா வந்து தன் முதல் குழந்தையை, தன் மகளை முதல் முறையாகப் பார்க்க இருக்கிறார். ஆனால் இங்கு நம் கேப்டன் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார். இதுதான் இந்திய கிரிக்கெட். ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி” இவ்வாறு சுனில் காவஸ்கர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.