அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம்? கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்!

அகமதாபாத்தில் உள்ள மோதேரா கிரிக்கெட் மைதானத்தை மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றி உள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் சுமார் 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த மைதானத்தில் 11 விளையாட்டு பிட்ச் மற்றும் பல பயிற்சி பிட்ச்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைதானத்திற்கு முதலில் சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானம் எனப் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 24 ஆம் தேதி இந்த மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை ஒட்டி புரணமைப்பில் இருந்த இந்த மைதானத்தை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் திறந்து வைத்தார். அதோடு சர்தார் வல்லபாய் என இருந்த பெயரை திடீரென்று நரேந்திர மோடி மைதானம் எனவும் மாற்றி வைத்தார்.

முன்னதாக இந்த பெயர் மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் திடீரென ராம்நாத் கோவிந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பலரும் அதிர்ச்சி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்தப் பெயர்மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் இருவரும் கிண்டல் அடித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

அதில், “அருமை! உண்மை எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியம். அதானி முனை, ரிலையன்ஸ் முனை ஜெய்ஷா தொடங்கி வைக்கிறார்” எனக் விமர்சனம் தெரிவித்து இருந்தார். அதோடு மற்றொரு எம்.பியான சசி தரூர், “அந்த உள்துறை அமைச்சர் (சர்தார் படேல்) தங்களது தாய்க்கழமான ஆர்.எஸ்.எஸ்.ஐ தடை செய்தவர் என்பதை பாஜக இப்போதுதான் உணர்ந்தது போல் தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.