உலகில் தனித்து விடப்பட்டவராக உணர்ந்தேன்… விராட் கோலி தெரிவித்த கருத்தால் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Friday,February 19 2021]
இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி தற்போது அகமதாபாத்தில் முகாமிட்டு உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் ஒருங்கிணைந்து நடத்தும் “Not Just cricket“ என்ற நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் விராட் கோலி கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியின்போது கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து உடனான தொடர் போட்டியின்போது “உலகில் தனித்து விடப்பட்டவராக உணர்ந்தேன்” என விராட் கோலி கூறி இருக்கிறார்.
இந்தக் கருத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அத்தொடர் போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாட வில்லை. மிகவும் குறைவான ரன்களை அடித்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்தப் போட்டியைக் குறித்து பேசிய விராட் கோலி நான் அப்போது உலகின் தனித்து விடப்பட்டவராக உணர்ந்தேன். அந்த நிலையில் இருந்து வெளிவர கடினமாக இருந்தது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
5 போட்டிகளைக் கொண்ட இங்கிலாந்து தொடர் போட்டியில் விராட் கோலி முறையே 1,8,25,0,39,28,0,7,6 மற்றும் 20 ரன்களை அடித்து 13.40 சராசரி வைத்து இருந்தார். இதனால் அப்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் தனக்கு ஆதரவாக அணியில் அதிகமானோர் இருந்தாலும் தான் ஆலோசனை பெற நிபுணர்கள் இல்லாத சூழல் காணப்பட்டதாகவும் இற்போத தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் 1-1 சமன் என்ற நிலையில் இருக்கும் இந்திய அணி உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கமாக கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் திறமை மிக்க கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தும் விராட் கோலி, மனதளவில் வீரர்களுக்கு வலிமை முக்கியமான தேவை என்பதை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு காலக்கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதை இப்போது எடுத்துக் காட்டிய விராட் கோலி அடுத்தடுத்த தருணங்கள் மாறும் என்ற நம்பிக்கைகயையும் வீரர்களுக்கு ஏற்படுத்தி உள்ளார்.