முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஜுன் 2020 இல் ரோஹித் சர்மாவுடன் லைவ் சேட்டில் ஈடுபட்டார் யுவராஜ் சிங். அப்போது கிரிக்கெட் வீரர் யஜுவேந்திர சாஹலின் சமூகத்தைக் குறித்த யுவராஜ் சிங் இழிவாக பேசினார் என்ற சர்ச்சை வெடித்தது. அந்த சர்ச்சையை வழக்கறிஞர் ஒருவர் தற்போது வழக்காக பதிவு செய்து இருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவரது ஆட்டத்தினால் பல முறை இந்திய அணி வெற்றிப் பெற்று இருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப் பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது நல்ல உடல் நிலையுடன் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் யுவராஜ் சிங் மீது ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார். அந்த புகாரில் இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் சாஹல் குறித்து யுவராஜ் சிங் சாதி ரீதியாக விமர்சித்தார் என்றும் இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து ஹிசார் போலீசார் யுவராஜ் சிங் மீது, ஐபிசி பிரிவு 153,153ஏ, 295, 505 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக ரோஹித் சர்மாவுடன் லைவ்சாட்டில் இருந்த யுவராஜ் சிங், யஜுவேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோக்கள் பற்றி கூறும்போது இவர்களுக்கு… வேறு வேலை இல்லை என்று சமூகத்தைத் தாக்கிப் பேசியதாக சர்ச்சை வெடித்தது. இந்தச் சர்ச்சையை அடுத்து யுவராஜ் சிங் அப்போதே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அதுகுறித்த தன்னுடைய பதிவில்,“எனக்கு எந்த விதப் பாகுபாடு மீதும் நம்பிக்கை இல்லை. அது சாதி, நிறம், தகுதி என எதுவாக இருந்தாலும் எனக்குப் பாகுபாடு கிடையாது. மக்கள் நலனுக்காகவே நான் என் வாழ்நாளை தொடர்ந்து செலவிட்டு வருகிறேன். வாழ்க்கையின் கண்ணியத்தை நான் மதிப்பவன். விதிவிலக்கு இன்றி அனைவரையும் நான் மதிப்பவன். நான் என் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக நான் தெரியாமல் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’‘ எனப் பதிவிட்டு இருந்தார்.
கடந்த ஜுன் 2020 இல் நடைபெற்ற இச்சம்பவத்திற்காக தற்போது யுவராஜ் சிங் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்திய விவசாயிகளின் பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு கண்டனம் தெரிவித்த வகையில், இந்தியக் கிரிக்கெட் வீரர்களை குறித்து ஏற்கனவே நெட்டிசன்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது யுவராஜ் சிங் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments