பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் பேட்: 12 வயது சிறுவன் மரணம்

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் கையிலிருந்து நழுவிய கிரிக்கெட் பேட், சிறுவனின் தலையில் விழுந்து அந்த சிறுவன் மரணம் அடைந்த பரிதாபமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது

கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சில மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முயற்சித்த போது, திடீரென பேட்ஸ்மேன் கையிலிருந்து பேட் நழுவியது.

அந்த சமயம் மதிய உணவு சாப்பிட்டு விட்டு குழாயில் கை கழுவுவதற்காக 12 வயது சிறுவன் ஒருவன் சென்று கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய அந்த பேட் அந்த சிறுவனின் தலையில் மிக வேகமாக மோதியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடிபட்ட சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் உடனே மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் மேல் சிகிச்சைக்காக எடுத்து செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்