உலகக்கோப்பை வரலாற்றை மாற்றிய கதை… "83" டிரெய்லர் வெளியீடு!
- IndiaGlitz, [Tuesday,November 30 2021]
இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றையே புரட்டிப்போட்டு கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பை வென்று சாதனை படைத்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “83“. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஏற்கனவே இரண்டு முறை உலகக்கோப்பை தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாக விளையாடி வந்தது. இந்த அணியுடன் போராடி இந்திய அணி வீரர்கள் முதல் முறையாக உலகக்கோப்பை வென்று சாதனை படைத்த நிகழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் “83“.
இந்தப் படத்தில் கபில்தேவ்வின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். மேலும் நடிகை தீபிகா படுகோன், தஹிர் ராஜ் பாசின், பன்கஜ் திரிபாதி, சாதிக் சலீம், ஜதீன் சர்னா ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
முன்னதாக கடந்த 26 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை நிலையில் தற்போது 3.49 நிமிடங்கள் கொண்ட டிரெய்லரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் “ஒரே ஒரே லம்சியம்தான்… ஜெர்சியை அணிந்துகொண்டு கிரிக்கெட் கிரவுண்டுக்குள் வந்துவிட்டால் உயிரைக்கொடுத்து நாட்டுக்காக விளையாடணும்“ என்று நடிகர் ரன்வீர் சொல்லும் வசனங்களுக்கு இடையே இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற காட்சியை காட்டப்பட்டு இருக்கிறது.
மேலும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் டிரெய்லரில் நெருக்கடி, சோகம், வெற்றியின் உச்சத்தில் ஆனந்தக் கண்ணீர் என அனைத்துத் தருணங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது புது உற்சாகத்துடன் அதிகப் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
இயக்குநர் கபீர்கான் இயக்கிய இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்துரி, சஜித் நடியாத்வாலா ஆகியோருடன் இணைந்து நடிகை தீபிகா படுகோனும் தயாரித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.