முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை
- IndiaGlitz, [Monday,January 09 2017]
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.
இதன்பின்னர் பெட்ரோல் முகவர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் வரும் 13ஆம் தேதி வரை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் பெட்ரோல் நிலையங்களில் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது என சற்று முன்னர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இனிமேல் பெட்ரோல் பங்க்கில் கார்டுகள் பயன்படுத்தினால் MDR charges என்று கூறப்படும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை ஒரே நாளில் முடிவுக்கு வந்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.