கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கி விளக்கம்
- IndiaGlitz, [Friday,March 27 2020]
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது வங்கிகளில் கடன் பெற்றவர்களின் பாரத்தைக் குறைக்கும் வகையில் மூன்று மாதத்திற்கு மாதாந்திரக் தவணைகள் கட்ட வேண்டியதில்லை என்று அறிவித்து இருந்தார். இதனால் வங்கியில் வீட்டு லோன், இருசக்கர லோன், பெர்சனல் லோன் என கடன் வாங்கியவர்கள் மூன்று மாதங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த கடன் கிரெடிட் கார்ட் கடனுக்கு பொருந்துமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் கூறிய போது, ‘கிரெடிட் கார்டு கடன் குறித்து ரிசர்வ் வங்கி சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை மூன்று மாதங்களுக்கு கட்ட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது
அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்துமே கடன் பெற்றவர்களிடம் மார்ச் 1ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது மே 31ஆம் தேதி வரைக்கான மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அசல் மற்றும் வட்டியுடன் கூடிய கடன், ஒரே தவணையாக செலுத்தும் புல்லட் கடன், மாதாந்திர தவணை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான தவணை ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.