மீண்டும் உடைந்தது மக்கள் நலக்கூட்டணி. ஆர்.கே.நகரில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி
- IndiaGlitz, [Saturday,March 18 2017]
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருங்கிணைத்த மக்கள் நலக்கூட்டணி, குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்று இரண்டு திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் ஆகியோர் இணைந்தும் ஒரு தொகுதியில் கூட இந்த கூட்டணியால் வெற்றி பெறமுடியவில்லை. அதுமட்டுமின்றி இந்த கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் உள்பட பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியை ஒருங்கிணைத்த வைகோ, சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து முடிவெடுக்க மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து தனித்து போட்டியிட போவதாக சிபிஎம் முடிவெடுத்துள்ளது.
சிபிஎம் சார்பாக ஆர்.லோகநாதன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். எனினும் மக்கள் நலக்கூட்டணி தொடர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.