வருமானவரி சோதனைக்கு இடையே கோ பூஜை நடத்திய தினகரன்

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

இன்று காலை 6 மணி முதல் சசிகலாவுக்கு சொந்தமான ஜெயா டிவி உள்பட பல்வேறு நிறுவனங்களிலும், சசிகலாவின் உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரிசோதனை நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சோதனைக்கு சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீடும் தப்பவில்லை. அங்கும் அதிகாரிகள் காவல்துறையினர்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருபக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தினகரன் கோ பூஜை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வருமான வரிச்சோதனையின் எந்தவித பரபரப்பும் இன்றி தினகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் கோ பூஜை நடத்தி வருவதாகவும், கோ பூஜையின் போது பசு மற்றும் கன்றுக்கு தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா வாழைப்பழங்களையும் அளித்ததாகவும் செய்திகளும் அதுகுறித்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இந்த வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய அரசே காரணம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அரசை குளிர்விக்கவே இந்த கோ பூஜை நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.