தனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கல்வி முறையே முற்றிலும் மாறியிருக்கிறது எனலாம். பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஆன்லைனில் பாடங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் இணையவசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட சில ஆசிரியர்கள் தங்களால் ஆன முயற்சியை அவர்களுக்காக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செல்போன்களை வாங்கிக் கொடுப்பது, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடங்களை சொல்லிக் கொடுப்பது, ஏன் ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த வீட்டுச்சுவரிலும் பாடங்களை எழுதி வைத்த சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றது. அதைப்போலவே தற்போது ஆசிரியர் ஒருவர் தனது ஸ்கூட்டரை நடமாடும் பள்ளியாக மாற்றி அசத்தி வருகிறார்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் கோரியா பகுதியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் ருத்ரா ராணா என்பவர் தனது மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார். இப்படி ஒரு கிராமத்திற்கு என்றால் பரவாயில்லை. பல கிராமங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தனது யமாஹா பைக்கை மினி பள்ளிக்கூடமாக மாற்றியிருக்கிறார். அந்த பைக்கில் சிறிய பலகை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மழை, வெயில் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க குடையும் பொருத்தப் பட்டு இருக்கிறது.
தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மாணவர்களின் கிராமத்திற்கு செல்லும் ராணா முதலில் வாகனத்தில் இருக்கும் பெல்லை அடிக்கிறார். அந்தச் சத்ததைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் வீட்டு முற்றத்தில் இருக்கும் திண்ணைகளில் வந்து அமருக்கின்றனர். பின்பு தன்னிடம் இருக்கும் மைக்கைப் பிடித்து பாடத்தை நடத்தத் தொடங்கிவிடுகிறார். இடையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கரும்பலகையையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படித்தான் ராணாவின் ஒவ்வொரு நாளும் கழிகிறது.
இதனால் ராணாவின் முயற்சிக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கொரோனா காலத்தில் ஏழை மாணவர்களின் நிலைமையைக் கருதி இப்படி செய்வதாக ஆசிரியர் ராணா தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments