விமானத்தில் கொரோனா… கழிவறையில் பயணம்செய்து நெகிழ வைத்த பெண்மணி!
- IndiaGlitz, [Wednesday,January 05 2022]
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து கழிவறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் மரிசா ஃபோட்டியோ ஐஸ்லாந்து விமானத்தில் பயணம் செய்துள்ளார். மேலும் பயணத்திற்கு முன்பே 2 முறை பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகடிவ் என முடிவு வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் 5 முறை ரேப்பிட் டெஸ்ட் செய்துள்ளனர். இந்த சோதனையிலும் நெகடிவ் என்றே முடிவு வந்துள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்ய அனுமத்திக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் விமானத்தில் ஏறி பயணம் செய்ய ஆரம்பித்த மரியாவிற்கு ஒன்றரை மணிநேரத்தில் அவருடைய கழுத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து சிறிது நேரத்திலேயே கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக அவருக்கு குறுஞ்செய்தியும் வந்துள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மரியா விமானப்பணிப்பெண் ராக்கி என்பவரை அழைத்து மற்ற பயணிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
உடனே விமானப் பணிப்பெண் ராக்கி அந்த விமானத்தின் இருக்கைகளை சரிசெய்ய முயற்சித்து இருக்கிறார். ஆனால் விமானத்தில் இருக்கைகள் காலியாக இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் அவர் மீண்டும் மரியாவை அணுகியிருக்கிறார். இதற்கெல்லாம் சற்றும் உடைந்துபோகாத மரியா விமானத்தின் கழிவறையில் தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து பயன்பாட்டிற்கு தடைச்செய்யப்பட்ட ஒரு கழிவறையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் மரியா பயணம் செய்திருக்கிறார். கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.