கொரோனா வைரஸால் விந்தணு சிக்கல்…. 2 மாதம் கழித்தும் நீளுவதாக தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 22 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட ஆண்களுக்கு 2 மாதம் கழித்தும் கூட அவர்களின் விந்தணு இயக்கம் மற்றும் எண்ணிக்கையில் சிக்கல் நீடிக்கிறது என லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு அதிலிருந்து மீண்ட 2 வாரங்கள் கழித்தும் அவர்களின் விந்தணு இயக்கம் மற்றும் எண்ணிக்கையில் பாதிப்பு இருப்பதாகக் கூறிய விஞ்ஞானிகள் இந்தப் பாதிப்பு 2 மாதம் கழித்தும்கூட தொடர்வதாக கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வகையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 2 வாரங்களில் 35 ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களின் 60% விந்தணு இயக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் விந்தணு எண்ணிக்கையில் 37% குறைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட 52 நாட்களில் 35 வயதுடைய 120 பெல்ஜியம் ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவக்ளிடம் 37% விந்தணு இயக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதும் 29% விந்தணு எண்ணிக்கை குறைந்துபோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனவில் இருந்து மீண்டப்பின் 2 மாதம் கழித்து நடத்தப்பட்ட சோதனையில் ஆண்களிடம் 28% விந்தணு இயக்கத்தில் பாதிப்பு இருப்பதையும் 6% விந்தணு எண்ணிக்கை குறைந்துபோய் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் குறைந்தது 3 மாதங்களுக்கு விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தில் சிக்கல் இருக்கும் என்றும் இந்தக் காலக்கட்டங்களில் கருவுறுதலுக்கு சிக்கல் ஏற்படலாம் என்றும் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்த விஞ்ஞானிகள் டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் குறைவான விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து இருந்தனர். மேலும் 11,329 ஒமைக்ரான் பாதிப்புகளுடன் 20 ஆயிரம் மற்றவகை கொரோனா வைரஸ் பாதிப்புகளை ஒப்பிட்டு பார்த்து ஒமைக்ரான் மற்றவகை வைரஸ்களைவிட தீவிரத்தன்மைக் கொண்டது எனவும் கூறியுள்ளனர்.