அறிக்கையில் கொரோனா டெத் 78… ஆனால் உண்மையில் 650… பகீர் ஏற்படுத்தும் குஜராத் ரிப்போர்ட்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக நேற்று 2,007 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,93,534 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பல வடமாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான இருக்கை இல்லாமலும், சுகாதார வசதி இல்லாமலும் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பல மாநில அரசுகள் அங்குள்ள கொரோனா உயிரிழப்புகளை மறைக்க முயல்வதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கொரோனா உயிரிழப்பு 78 என அம்மாநில அரசு தகவல் வெளியிட்டு இருந்தது. ஆனால் அதேநாளில் அம்மாநிலத்தின் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோரா போன்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 689 இறந்த உடல்களை அதன் நிர்வாகமே அப்புறப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சில ஆங்கில நாளேடுகள் வலுவான சந்தேகத்தை எழுப்பி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிர்ச்சி ரிப்போட் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களிலும் கடும் விவாதம் வைக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத் நகரத்தில் உள்ள அரசு மருத்தவமனையில் ஏப்ரல் 16 ஆம் தேதி 200 இறந்த உடல்களை மருத்துவமனை நிர்வாகமே அப்புறப்படுத்தி இருக்கிறது. அபோல சூரத்தில் 190 இறந்த உடல்களும் ஜாம் நகரில் உள்ள குருகோவிந்த் மருத்துவமனையில் 24 உடல்களும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் தகவல்களை கொடுத்த வருகிறது.

இப்படி இறந்த உடல்களை ஏன் மருத்துவமனை நிர்வாகமே அப்புறப்படுத்த வேண்டும், ஒருவேளை மாரடைப்பு, நீரிழிவு போன்ற காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பின் அவர்களது உறவினர்களிடம் உடல்களை ஒப்படைத்து இருக்கலாமே எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி குஜராத்தில் 78 உயிரிழப்பு என அரசு அறிக்கை கூறும்போது பல்வேறு ஊடகங்கள் அன்றைய தினத்தில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 689 என்றும் மாரடைப்பு மற்றும் நீரிழவு போன்ற காரணங்களைக் கூறி அரசு இந்த எண்ணிக்கையை மறைக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.