கொரோனா பாதித்ததால் வீட்டை பூட்டிய முதலாளி… இளம்பெண் குழந்தையோடு டாக்ஸியில் தங்கிய அவலம்!
- IndiaGlitz, [Tuesday,May 11 2021]
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அந்தப் பெண் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டை இழுத்துப் பூட்டி இருக்கிறார் வீட்டின் உரிமையாளர். இதனால் அந்தப் பெண் தனது குழந்தையுடன் கடந்த சில தினங்களாக டாக்ஸியில் தங்கிய அவலமும் ஏற்பட்டு இருக்கிறது.
இமாச்சல் மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள கார்சோக் எனும் கிராமத்தில் வசிப்பவர் பராஸ்ராம். இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்லாவிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவிக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. மேலும் அறிகுறி அதிகம் இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து கார்சோக் திரும்பிய பராஸ்ராம் தான் குடியிருக்கும் வீட்டு முதலாளியிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் நுழைவதற்கு கூட அனுமதி மறுத்து வேறு இடத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இதனால் செய்வதறியாது பதறிப்போன பராஸ்ராம் தன்னுடைய வாடகை காரிலேயே 2 வயது குழந்தை மற்றும் மனைவியுடன் கடந்த சில தினங்களாக தங்கி வந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அம்மாவட்ட எஸ்பியை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு பராஸ்ராம் கோட்டுக் கொண்டுள்ளார். இதனால் அம்மாவட்ட எஸ்.பி கீதாஞ்சலி வீட்டின் உரிமையாளருடன் பேசி தங்குவதற்கு அனுமிதி வாங்கித் தந்ததோடு சமையல் பொருட்களையும் வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா மீது இருக்கும் பயத்தினால் சிலர் இதுபோன்ற மனிதநேயத்தையும் பறந்து விடுகின்றனர்.