கொரோனா சிகிச்சை வார்டிலும் பாலியல் வன்கொடுமை? பெண் உயிரிழந்த பரிதாபம்!
- IndiaGlitz, [Friday,May 14 2021]
இந்தியாவில் கொரோனாவினால் தினம்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இப்படியொரு கொடூரம் நடைபெற்று வரும் சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை அந்த மருத்துவமனையில் வேலைப்பார்த்த ஆண் செவிலியரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருகின்றனர். இப்படி இருக்கும் போது போபால் மருத்துவமனையில் ஒரு கொடூரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. போபால் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத்தில் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அங்கு வேலைப்பார்த்த ஆண் செவிலியர் சந்தோஷ் ஆஹிர்வார்(40) என்பவர் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி இருக்கிறார். இதையடுத்து அந்த பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கடிதம் மூலம் மருத்துவர்களுக்கு தெரிவித்து உள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் உடல் மோசம் அடைந்து உள்ளது. இதனால் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை ஐசியு பிரிவிற்கு மாற்றி தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி வெறும் 24 மணி நேரத்தில் அந்தப் பெண் உயிரிழந்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற போபால் விசவாயு கசிவு சம்பவத்தில் மாட்டி உயிர் தப்பியவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். கொரோனாவின் கோரத்திலும் இதுபோன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்று இருப்பது குறித்து சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.