அலட்சியத்தால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி… பகீர் சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து உள்ளார். இந்நிலையில் நோயாளிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சையை அளிக்கவில்லை என்றும் அவர்கள் காட்டிய அலட்சியத்தால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகள் நிலவி வருகிறது. இதனால் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை இன்றி இறந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியது. இதையடுத்து அன்றைய தினமே அவரது உறவினர்கள் பிஸ்வபங்களா கிரிரங்கன் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பினர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை பாதிக்கப்பட்ட நபரைப் பார்ப்பதற்காகவும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு பாதிக்கப்பட்ட நபர் அமர்ந்த நிலையிலேயே சுயநினைவின்றி கிடந்து இருக்கிறார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி விஷயத்தை கூறியுள்ளனர். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட உடனேயே மருத்துவமனையில் அனுமதித்து விட்டோம். ஆனால் மருத்துவர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை. அலட்சியம் காட்டியதோடு எந்த சிகிச்சையும் செய்யாமலேயே விட்டுவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து விட்டார் என உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து காவல் துறை அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளி அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த இந்தச் சம்பவம் தற்போது கடும் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.