கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,October 14 2020]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவல் விஞ்ஞானிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இதற்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டால் நுரையிரல் அழற்சி (வீக்கம்), சுவாசக் கோளாறு, இதயப் பாதிப்பு, ஏன் மூளை செயல்படாமல் போகும் அளவிற்கு நரம்பு பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு காது நிரந்தரமாக காது கேட்காமல் இருப்பதை இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சார்ந்த சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். காரணம் ஒருவேளை கொரோனா பாதிப்பால் இதுபோன்ற காது கேட்காமல் போகும் நிலைமை வந்தால் ஸ்டெராய்டுகள் மூலம் முறையான சிகிச்சை அளித்து மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் ஏன் காதுகேட்காமல் போகிறது என்பது குறித்த முறையான விளக்கம் எதையும் அந்த விஞ்ஞானிகள் வெளியிட வில்லை. மேலும் இதுகுறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பின்பு இதே போன்ற பிரச்சினை சிலருக்கு எற்படுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்குமுன் பி.எம்.ஜே கேஸ் ரிப்போட் எனும் இதழில் இதேபோன்று கொரோனா பாதிப்பினால் ஒரு நோயாளிக்கு காது கேட்காமல் போனது பற்றி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு முறையான ஸ்டெரொய்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் மீண்டும் காதுகேட்கும் திறன் வந்ததாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.