இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
- IndiaGlitz, [Thursday,August 19 2021]
2 தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின்பு 3 ஆவதாக “பூஸ்டர் டோஸ்“ கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பல உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னரே அதுகுறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இதுவரை 56.06 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பலவிதமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வருகிறது. அதோடு “டி“ செல்நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி இருக்கிறது. இதனால் 3 ஆவது டோஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முன்னெடுக்கப்பட வில்லை.
இந்நிலையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவல்லா, “பூஸ்டர் டோஸ்“ கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
அதாவது 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பு 6 மாதம் கழித்து அதன் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தது தெரிய வந்ததாகவும் அதானல் 3 ஆவது டோஸ் எடுத்துக் கொண்டதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவல்லா தெரிவித்து உள்ளார். மேலும் அந்நிறுவனத்தின 8 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் தற்போது 3 ஆவது டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.