பேசினாலே கொரோனா பரவுமா? அச்சுறுத்தும் புதிய தகவல்!
- IndiaGlitz, [Friday,May 28 2021]
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. முன்னதாக தும்மினாலோ அல்லது இருமினாலோ அவர்களது நீர்த்துளிகள் காற்றில் பரவி அதன் மூலம் கொரோனா நோய் மற்றவர்களுக்கு பரவும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள புதிய நெறிகாட்டு வழிமுறைகளில் தும்மல் மற்றும் இருமலுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போதும் அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்து உள்ளது. பொதுவா ஒரு நபர் பேசம்போது வெளிப்படும் எச்சில் குறைந்தது 2 மீட்டர் தூரத்தில் கீழே விழுந்து விடும்.
ஆனால் ஒருவர் பேசும்போது அவரது எச்சிலில் இருந்து எரோசோல் எனும் சிறிய துகளும் வெளிப்படும். இப்படி வெளிப்படும் எரோசோல்கள் காற்றில் பரவும்போது குறைந்தது 10 மீட்டர் வரையிலும் செல்லக்கூடும். மேலும் இந்த எரோல்சோல்கள் நீண்ட நேரம் உயிருடன் இருக்கும். இப்படி வெளிப்படும் எரோசோல்களில் ஒருவேளை பாதிக்கப்பட்ட நபரின் கொரோனா வைரஸ் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு இருக்கிறது.
இதனால் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அப்படி சென்றாலும் அங்குள்ள எந்தப் பொருளையும் தொடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.