யாரெல்லாம் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்?
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வலியுறுத்தி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்த கொரோனா பீதி இன்றுவரை நீடித்துவருகிறது. இந்நிலையில் அவசரகால அடிப்படையில் கடந்த 2020 டிசம்பர் முதற்கொண்டு உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 16, 2021 முதற்கொண்டு கோவேக்சின், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவருகிறது.
இந்நிலையில் சில நாடுகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளைத் தாண்டி 3 ஆவது டோஸ் செலுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. இப்படி செலுத்தும்போது இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும் என்றும் டெல்டா போன்ற வீரியம் கொண்ட கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை காக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு பணக்கார நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதனால் குறைந்தது செப்டம்பர் இறுதிவரை 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முடிவை உலகநாடுகள் தள்ளிவைக்க வேண்டும் என்று WHO கோரிக்கை வைத்து வருகிறது.
இந்நிலையில் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது டோஸை செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்காவின் FDA வலியுறுத்தி இருக்கிறது. மேலும் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளை 3 ஆவது டோஸின் அவசரகால பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தவும் அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவெடுத்து உள்ளது.