தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது.. உயர்நீதிமன்றம் பதில் ...!
- IndiaGlitz, [Thursday,June 03 2021]
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி வழக்கப்படமாட்டாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுங்குன்றத்தில் அமைந்துள்ளது மத்திய அரசின், எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம். இங்கு தடுப்பூசி உற்பத்தியை துவங்க தமிழக அரசு, இந்நிறுவனத்தை குத்தகை முறையில் கேட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் இக்கடிதம் குறித்து, எந்தமுடிவையும் மோடி அவர்கள் வெளியிடவில்லை.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மத்திய அரசு இதுகுறித்து எதுவும் பேசாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மத்திய அரசு மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இதனால் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில், தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மதுரையைச் சார்ந்த வெர்னிகோ மேரி சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், அவர்கள் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் எதையும் உத்தரவிட முடியாது.
தடுப்பூசி மையம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்க நேரம் தர வேண்டும். இதுகுறித்த ஆலோசனைகளை மத்தியஅரசு தான் வழங்கவேண்டும். அதனால் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை துவங்க உயர்நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் சார்பாக கூறப்பட்டது.
தடுப்பூசி நிறுவனம் குறித்து மத்திய, மாநில ஆராய்ந்து முடிவெடுக்கும் என நம்புகிறோம், இதற்காக மாநில அரசுகள் தக்க நடவடிக்கை என்றும் நம்புகிறோம். இது தொடர்பான எந்த உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்காது, என நீதிபதிகளின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.