பெனாசிர் பூட்டோ வழக்கில் திடீர் திருப்பம்: பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,September 01 2017]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நடந்து பத்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று வழங்கிய நீதிபதி அஸ்கார், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்த வழக்கின் தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவித்தார். மேலும் பாகிஸ்தானில் முஷரப்புக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முஷரப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானை விட்டு வெளியேறி தற்போது துபாயில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்ததாகவும், அவர்கள் இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிப்பதாகவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.