'காந்தாரா' படத்தின் உயிர் ஜீவனான காட்சிக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபத்தில் வெளியான 'காந்தாரா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் உயிர் ஜீவனான காட்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ’வராஹ ரூபம்’ என்ற பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த பாடல்தான் இந்த படத்தின் உயிர் ஜீவன் என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.

ஆனால் இந்த பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நவரசம் என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என அந்த பாடலின் தயாரிப்பாளர்களான தாய்குடம் பிரிட்ஜ் இசைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றம் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வெளியிட்ட நவரசம் என்ற பாடலுக்கும், வராஹ ரூபம் என்ற பாடலுக்கு இடையே அதிக ஒற்றுமைகள் இருப்பதால் இந்த பாடலை படக்குழுவினர் பயன்படுத்தக்கூடாது என்றும் தியேட்டர், ஓடிடி, யூடியூப் என அனைத்து தளங்களிலும் இந்த பாடல் இடம் பெறக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பாடல் இல்லாமல் 'காந்தாரா’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு திருப்தி இருக்காது என்பதால் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவிடம் 'காந்தாரா’ தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பாடலை பயன்படுத்த அனுமதியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.