நேரில் ஆஜராகும்படி நடிகை கங்கனாவிற்கு சம்மன்… என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
பிரபல ஹிந்தி பாடலாசிரியர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றம் நடிகை கங்கனா ரனாவத்திற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வன்முறை கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று அவரது டிவிட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. தற்போது அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும்படி மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் நடித்து முடித்து உள்ள “தலைவி” திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர் தற்போது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் அவர் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுகளினால் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர், தன்னை பற்றி அவதூறாகவும் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறி இருக்கிறார் என்றும் இது தன் புகழுக்கு இழுக்கை சேர்க்கிறது என்றும் நடிகை கங்கனா மீது, மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். இந்த வழக்கை கடந்த டிசம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜுஹு போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து நடிகை கங்கனாவிற்கு ஜுஹு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணை வந்த நிலையில் நீதிபதிகள் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் நடிகை கங்கனாவிற்கு அனுப்பிய சம்மன் குறித்து அவர் பதில் அளிக்க வில்லை என ஜுஹு போலீசார் குற்றம் சாட்டினர். இதையடுத்து நடிகை கங்கனாவை நேரில் ஆஜராகும்படி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு மார்ச் 1 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.