'அயலான்' உள்பட 2 படங்களை வெளியிட நீதிமன்றம் தடை.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,December 15 2023]
சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நடித்த வைபவ் நடித்த ‘ஆலம்பனா’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களை வெளியிட நீதிமன்றம் திடீரென தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
’அயலான்’ மற்றும் ‘ஆலம்பனா’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய 14.7 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தரவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் டிஎஸ்ஆர் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவில் முகாந்திரம் இருப்பதால் ’அயலான்’ மற்றும் ‘ஆலம்பனா’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் நான்கு வாரங்கள் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்
மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்குள் 10 கோடி ரூபாயை செட்டில் செய்து விட்டால் இரண்டு படங்களும் வெளியாவதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.