சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக புகார்
- IndiaGlitz, [Monday,June 29 2020]
சாத்தான்குளம் தந்தை மகன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமாக மரணம் அடைந்தது குறித்த வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சாத்தான்குளம் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆவணங்களைத் தர மறுத்ததோடு, நீதிபதியை ஒருமையில் இழிவாகப் பேசியதாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பார்த்திபன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சாத்தான்குளம் கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சாத்தான்குளம் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.