சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,April 10 2020]
சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை பீனிக்ஸ் மாலுக்கு வந்தவர்கள் உடனடியாக தங்களை தாங்களே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
மேலும் அந்த ஒரு வாரத்தில் பீனிக்ஸ் மாலுக்கு வந்தவர்கள் சுமார் 3,300 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த 96 பேர்களில் ஒரு தம்பதியினர் என்றும் அந்த தம்பதிகள் சமீபத்தில் பீனிக்ஸ் மால் சென்று வந்தவர்கள் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மேலும் பீனிக்ஸ் மால் சென்றவர்கள் யாருக்காவது கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.