தண்டவாளத்தில் விபரீத போட்டோஷூட்.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம..

  • IndiaGlitz, [Tuesday,July 16 2024]

ரயில் தண்டவாளத்தில் ஒரு ஜோடி போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் வந்ததை அடுத்து 90 அடி பள்ளத்தில் இருவரும் குதித்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

தற்போது போட்டோஷூட் என்பது நடிகர் நடிகைகள் மட்டும் இன்றி சாதாரண பொதுமக்களும் எடுக்க தொடங்கிவிட்டனர் என்பதும் வித்தியாசமான ஒரு இடத்தை பார்த்தால் உடனே அங்கு போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் புதுமண ஜோடிகள் போட்டோஷூட் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில் 90 அடி பள்ளத்தில் புதிதாக திருமணமான ஒரு ஜோடி தண்டவாளத்தில் போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல் என்ற 22 வயது இளைஞர் தனது மனைவி ஜான்வியுடன் திருமணத்திற்கு பின்னர் போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் தேர்வு செய்த இடம் ராஜஸ்தானில் உள்ள 90 அடி பள்ளத்துக்கு மேல் உள்ள தண்டவாளம். இங்கு இருவரும் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மேம்பாலத்தில் ரயில் வந்தது.

இதை கவனித்த போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ராகுலின் சகோதரி தண்டவாளத்தை விட்டு ஒதுங்கினார். ஆனால் ராகுல், ஜான்வி தம்பதிகளால் ஓடிவர முடியவில்லை. இதனால் ரயில் அவர்களை நெருங்கியது. இந்த நிலையில் ரயில் மோதினால் உயிர் பிழைக்க முடியாது என்பதை முடிவு செய்த ராகுல், ஜான்வி தம்பதி ஒன்றாக பாலத்தில் இருந்து 90 அடி பள்ளத்தை நோக்கி குதித்தனர்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டனர். ராகுலுக்கு முதுகில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜான்விக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் அவர்கள் குணமாக சில மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் பாலத்தில் தம்பதி நிற்பதை பார்த்து ரயில் டிரைவர் பிரேக் பிடித்து ரயிலை சரியான நேரத்தில் நிறுத்திவிட்டதாகவும், தம்பதிகள் குதிக்காமல் இருந்தால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.