கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோகுயினுக்குத் தடை விதித்த நாடுகள்!!!
- IndiaGlitz, [Wednesday,May 27 2020]
நேற்று WHO வெளியிட்ட அறிக்கையில் மலேரியாவிற்கு மட்டுமே ஹைட்ராக்ஸிகுளோகுயின் மருந்து நல்ல பலனைத் தருவதாகவும் தொடந்து நடத்தப் பட்ட பல்வேறு ஆய்வுகளில் இந்த மருந்து கொரோனாவிற்கு தக்க சிகிச்சையை அளிக்க வில்லை என்றும் கூறியிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் The Lancet ஆய்விதழில் வெளியிடப் பட்டு இருந்த கட்டுரையை எடுத்துக்காட்டி கொரோனா சிகிச்சையில் இந்த மருந்து மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் முடக்குவாதம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே WHO இந்த மருந்து குறித்த ஆய்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்து இருந்தது. அதையடுத்து இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பையும் WHO வெளியிட்டு இருந்தது.
WHO அறிவிப்பை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மருந்து குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது பிரான்ஸ் அரசாங்கம் இந்த மருந்துக்கு அந்நாட்டில் தடை விதித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,06,925 ஆக பதிவாகியிருக்கிறது. உயிரிழப்பு 350876 என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதல் இடத்திலே இருந்து வருகிறது. தற்போது பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை வரும் ஆகஸ்ட் மாதத்தில் 5 மடங்காக அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டு இருக்கிறது.