கொத்தாக குவியும் சடலங்கள்...!உபியில் ஆற்றங்கரையில் நடக்கும் சோகம்....! தகரம் வைத்து மறைத்த அரசு...!
- IndiaGlitz, [Thursday,April 15 2021]
உத்திரபிரதேச மாநிலம்,லக்னோவில், கோமதி ஆற்றங்கரையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் 2-ஆவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு என்பது 8000-த்தையும் கடந்துள்ளது. வடமாநிலங்களில் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையை குறைந்து காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில் லக்னோ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா மற்றும் பிற நோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கு, உறவினர்கள் வெகுநேரம் காத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இதுபற்றி பைகுந்தாம் பகுதி மயானத்தில் பணிபுரியும் முன்னா என்பவர் கூறியிருப்பதாவது,
கடந்த புதனன்று 14 நபர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நான் 46 உடலைகளை அன்று எரித்தேன். இங்கு ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன், ஒரே நாளில் இத்தனை உடல்கள் எரிக்க வந்தது இதுவே முதன்முறை. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா காட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டது. இதில் கொரோனாவால் இறந்தவர்களில் 124 பேர் அடங்குவர், 276 மரணங்கள் எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை என முன்னா கூறுகிறார்.
கோமதி ஆற்றங்கரையில் அருகில் இருக்கும் பைன்சாகுந்த் இடுகாட்டில், நேற்று ஏராளமான உடல்கள் எரிக்கப்பட்டதால் அங்கு தீ ஜுவாலைகள் போல் காணப்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான சடலங்களை எரிப்பதால், மக்களை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிணங்கள் எரிப்பதை பொதுமக்கள் யாரும் பார்க்காமல் இருக்க, அரசு சார்பில் அப்பகுதியில் தகரங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆளுமையிலே, இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.