ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 01 2020]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 100ஐ தாண்டியதால் சென்னையில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தமிழக சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே போவதற்கு சென்னை மக்கள் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காத தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஊரடங்கு நேரத்தில் காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரியும் நபர்களும் சென்னையில் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை கடுமையாக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதனை அடுத்து சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமன்றி 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் விதிகளை மீறி செயல்படும் கடைகள் நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுத்து ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல் செய்தால் மட்டுமே சென்னையில் கொரோனா வைரசின் தாக்கம் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.