இந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!!

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. சீனாவிலும் இந்தியாவிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் அங்கும் கொரோனா எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் புதிய பீதியை கிளப்பி இருக்கிறார்.

மேலும் சீனாதான் விரோதியே. அங்கிருந்துதான் கொரோனா பரவியது என்று தனது கருத்தை வெளிப்படுத்திய அதிபர் ட்ரம்ப் “நாங்கள் ஒவ்வொரு முறையும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் போது நீங்கள் அதிக எண்ணிக்கையை பார்க்கிறீர்கள், நான் உறுதியாக சொல்கிறேன்; இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் அங்கும் இதே நிலைமைதான்” என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்து இருக்கிறார். ஜெர்மனி இதுவரை 4 மில்லியன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கிறது. தென் கொரியா 3 மில்லியனுக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனைகளை செய்திருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனைகளை செய்திருக்கிறோம்.மேலும் இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் எனவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் இன்று காலை 9 மணி வரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அளவு 45,24,317 என்று இந்திய கவுன்சில் குறிப்பிட்ட தகவலை அதிபர் ட்ரம்ப் எடுத்துக் காட்டி இருக்கிறார். சீனாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 83,030 என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4634 என்றும் அதிபர் ட்ரம்ப் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த அளவுகள் மிகவும் குறைவு என்றும் பரிசோதனைகள் அதிகப்படுத்தும்போது உண்மையான விவரங்கள் வெளிவரும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 19,67,273 ஆக உயர்ந்து இருக்கிறது. உயிரிழப்புகள் 1,11,408 என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டபோது “வேலையில்லாத நேரத்தில் இந்த விவகாரம் பலருக்கும் உதவியாக இருந்தது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.