கொரோனா வைரஸ்.. திணறும் சீனா.. பாதிக்கப்பட்டவர்கள் 30,000.. பலி எண்ணிக்கை 636..!
- IndiaGlitz, [Friday,February 07 2020]
ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் கொரோனா நோய் தொற்றும் அதனால் இறக்கும் மக்களின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் இதுவரை அங்கு 636 பேர் இறந்துள்ளனர். 30,000க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீன தேசிய சுகாதார ஆணையத்தின் அறிவிப்புப்படி கடந்த சில நாட்களில் மட்டும் 3,143 பேருக்கு இந்த கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாகவும், இதனால் அங்கு இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,161-ஐத் தொட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோய் தொற்றின் மையப்பகுதியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69 பேர் இறந்துள்ளனர். தொடர்ச்சியாக பரவி, உயிர் பலி வாங்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் சீன அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த நோய் தற்போது உலகம் முழுவதும் சுமார் 20 நாடுகளில் பரவியுள்ளது. இதனால், உலக சுகாதார அமைப்பு, உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.