கொரோனா வைரஸ் ஆகஸ்ட் மாதத்திலேயே பரவத் தொடங்கிவிட்டது!!! கொளுத்திப் போட்ட புதிய ஆய்வு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து உலக நாடுகளிடையே போர் மூளும் அளவிற்கு கடும் சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில் சில செயற்கைக்கோள் படங்களை வைத்து கொரோனா வைரஸ் பரவல் எப்போது ஆரம்பித்து இருக்கும் என்ற ஆய்வில் ஹார்டுவோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். வுஹான் மாகாணத்தில் முக்கிய மருத்துவ மனையாக இருக்கும் டினாயூ மருத்துவமனைக்கு வெளியே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகபடியான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. எனவே ஆகஸ்ட் மாதத்திலேயே வுஹான் நகரத்தில் தொற்று ஏற்பட்டு பரபரப்பு கிளம்பியிருக்கலாம்.
அதே நேரத்தில் பைடூ எனப்படும் இணையத்தில் கொரோனா அறிகுறிகளான சளி, பேதி, காய்ச்சல் போன்ற தேடுச் சொற்கள் அதிகமாக இருந்து இருக்கிறது. எனவே பரவி வரும் புதிய நோய்த்தொற்றை குறித்து மக்கள் அதிகளவில் இணையத்தில் தேடியிருக்கிறார்கள் என்ற முடிவிற்கு ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இந்த முடிவிற்கு ஒரு தனியார் செயற்கைக்கோள் படத்தை விஞ்ஞானிகள் ஆதாரமாக காட்டுகின்றனர். கடந்த அக்டோபர் 2018 இல் டினாயூ மருத்துமனைக்கு முன்பு 171 கார்கள் நின்றன. 2019 அக்டோபரில் அதன் அளவு 285 ஆக உயர்ந்து இருக்கிறது. முந்தைய ஆண்டைவிட 65 விழுக்காடு அதிகமான வாகனம் மருத்துவமனைக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே வுஹான் மாகாணத்தில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே கண்டறியப் பட்டு இருக்கலாம் என்ற முடிவினை ஹார்டுவோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இணையத் தளங்களில் கொரோனா அறிகுறிகள் குறித்த தகவல்களை வுஹான் நகர மக்கள் அதிகளவிற்கு தேடியதாகவும் இந்த ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது. இதுகுறித்து “அந்த நேரத்தில் வுஹானில் ஏதோ ஒன்று நடந்ததைக் காட்டும் வகையில் அமைந்த வளர்ந்துவரும் தகவல் திரட்டு இது” என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பிரௌன்ஸ்டீன் குறிப்பிட்டு உள்ளார். மேலும், உலகத் தொற்று தொடங்கிய காலம் என்று முன்னர் நம்பப்பட்ட காலத்துக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையில் சமூகத் தொந்தரவு ஏற்பட்டது தெளிவாகத் தெரிகிறது, இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படம் இருக்கிறது என ஆய்வுக்குழு சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்த ஆய்வை சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இது கேலிக்குரியது என ஒதுக்கியிருக்கிறார்.
இதுவரை வெளியான தகவல்கள்
உண்மையில் கொரோனா பாதித்த முதல் நோயாளி யார் என்ற குழப்பங்களுக்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. அமெரிக்காவின் Wall Street பத்திரிக்கை ஒன்று முதல் கொரோனா நோயாளி வுஹான் சந்தையில் இறால் விற்பனையில் ஈடுபட்ட 57 வயதான Wei Guixian எனச் செய்தி வெளியிட்டு இருந்தது. இவர் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளால் வுஹான் நகரத்து பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு நாட்கள் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வுஹான் நகர 11 ஆவது கிளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தகவல் தெரிவித்து இருந்தது. அந்தப் பெண்மணி 11 ஆவது கிளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருடன் 27 நோயாளிகள் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுடன் அனுமதிக்கப் பட்டு இருந்ததாகவும் சீனாவின் Mirror News தெரிவிக்கிறது.
இந்நிலையில் Wall Street பத்திரிக்கை முதல் கொரோனா நோயாளி 57 வயதான Wei Guixian எனக் குறிப்பிட்டது. ஆனால் மருத்துவ இதழான The Lancet டிசம்பர் 1 ஆம் தேதியே கொரோனா அறிகுறியோடு ஒரு நபர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருந்ததாகத் தகவல் தெரிவிக்கிறது. முதலில் இந்நோய்க்கு சிகிச்சைக் கொடுத்த மருத்துவர்கள் இது வித்தியாசமான அறிகுறியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த நிபுணர்கள் நிமோனியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியதாகவும் சீனாவின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்படாத புது நிமோனியா பரவி வருகிறது என்ற தகவல் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு கூறப்பட்டது. இதைப்பற்றி WHO, சீனா இரண்டும் ஒப்புக் கொள்கின்றன.
அதற்குப் பிறகுதான் இது கொரோனா நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினார். புதிய நாவல் கொரோனாவின் மரபணு, பழைய சார்ஸ் மரபணு போன்றே இருந்ததால் சார்ஸாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறிவந்தனர். கடைசியில் இது கொரோனாவின் புது வகை என்று கண்டுபிடிக்கப் பட்டவுடன் SARS-Covid-19 எனப் பெயரிடப் பட்டது. கொரோனாவின் பரவலைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனம் ஜனவரி 3 ஆம் தேதி உலக நாடுகளுக்கு அறிவித்தது. ஜனவரி 14 ஆம் தேதி ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது.
நோயின் தீவிரத்தால் வுஹான் மாகாணம் முழுவதும் ஜனவரி 23 ஆம் தேதி முடக்கப்பட்டது. அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி வுஹானைத் தவிர உலக நாடுகளில் 82 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே இது உலகப் பெருந்தொற்றாக உருவெடுக்கும் என்ற கவலையை உலகச் சுகாதார நிறுவனம் வெளிப்படுத்தியது. இந்தத் தகவல்கள் அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் சீனா வெளியிட்ட வெள்ளை அறிக்கை, மருத்துவ இதழ்கள் வெளியிட்ட ஆய்வுத் தகவல்களில் இருந்து பெறப்பட்டன.
ஆனால் தற்போது ஹார்டுவோர்டு பல்லைக்கழகம் செயற்கைக்கோள் புகைப்படங்களை கொண்டு வெளியிட்ட ஆய்வு முடிவில் எந்த ஆதாரமும் இல்லை என்று சீனாவின் வெளியுறவுத் துறை நிராகரித்து இருக்கிறது. அறிஞர்கள் இந்த ஆய்வைக் குறித்து இது பகுப்பாய்வு செய்யப்பட்டவை அல்ல, அதாவது பிய்ர் ரிவியூவ்டு அல்ல என்ற விமர்சனத்தை வைத்துள்ளனர். மேலும் சில விஞ்ஞானிகள் ஒரு பெருந்தொற்று பரவ ஆரம்பிக்கும் போது அதற்கு முன்பே சில அறிகுறிகளை வெளிப்படுத்துவது இயல்புதான். ஆனால் செயற்கைக்கோள் படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பரவியது என்ற முடிவிற்கு வரமுடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout