சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.
- IndiaGlitz, [Thursday,January 30 2020]
திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும் தற்போது இந்த வைரஸ் பரவியுள்ளது உறுதியாகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ''ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ''கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் குறித்து வியாழக்கிழமையன்று நடக்கவுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் சந்திப்பில் இந்த வைரஸால் உலக அளவில் சுகாதார அவசரநிலை தோன்றியுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது.
இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.