சாதாரண சளியா? கொரோனா சளியா? கண்டுபிடிப்பது எப்படி…

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

 

கொரோனா நோய்த்தொற்றுக்கான முதல் அறிகுறி சளி, காய்ச்சல் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிகுறிகளை வைத்துத்தான் ஒரு நபருக்கு கொரோனா இருக்கிறதா என்ற சந்தேகத்தையே நாம் எழுப்பி வருகிறோம். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழைக் காலம் என்பதால் தற்போது பலருக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. இந்நேரத்தில் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டைக் குறித்து சாதாரண ஜலதோஷமா அல்லது கொரோனாவின் அறிகுறியா என்று தெரியாமல் பலரும் விழிபிதுங்கும் நிலை ஏற்படுகிறது. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையிலான புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளும் தற்போது வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தின் சில விஞ்ஞானிகள் கொரோனாவினால் வாசனை குறைபாடு மற்றும் சுவையற்று போதல் போன்ற பாதிப்புகளை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சுவையற்றுப் போதல் மற்றும் வாசனை தெரியாமல் போதல் போன்ற குறைபாடுகள் அதிகளவில் ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் குறைபாடு சாதாரண ஜலதோஷத்தில் இருந்து வேறுபட்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

பொதுவாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாசனை தெரியாமல் இருத்தல் மற்றும் சுவையுணர்வு அற்றுப்போதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனால் ஆங்கிலியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் சாதாரண ஜலதோஷத்தைவிட கொரோனாவினால் ஏற்படும் ஜலதோஷம் பயங்கரமானது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரு நபரைத் தாக்கும்போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளைச் சுரக்கிறது. இதனால் சைட்டோகைன், நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற கோளாறுகளும் ஏற்படுகின்றன. அதைத்தவிர்த்து கொரோனா வைரஸ் பாதித்த நபருக்கு மோசமான சளித் தொல்லையை கொடுத்து விடுகிறது. இதனால் அவரது வாசனை அறியும் திறன் முற்றிலும் குறைந்து போகிறது. இது சாதாரண ஜலதோஷத்தைவிட பல மடங்கு குறைவாக இருக்கும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதாவது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு முற்றிலும் வாசனை அறியும் திறன் இல்லாமல் இருக்கும். இந்தக் குறைபாட்டை வைத்து வேறுபாடுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கசப்பு மற்றும் இனிப்பு சுவைகளை அவர்களால் உணர்ந்து கொள்ளவே முடியாது எனவும் தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்த முழுமையான அறிக்கையை ஆங்கிலியா விஞ்ஞானிகள் வைராலஜி ஆய்விதழில் வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.