தமிழகத்தில் 1,000 ஐ தொடும் கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Tuesday,March 16 2021]
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இதே நேரத்தில் வெறும் இரண்டு இலக்க எண்களில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் படிப்படியாக அதிகரித்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு எகிறியது. பின்னர் கொரோனா ஊரடங்கு, சமூக இடைவெளி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டது.
ஆனால் இந்நிலைமை தற்போது தலைகீழாக மாறிவருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 366 ஆக பதிவாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 867 ஆக அதிகரித்து உள்ளது.
இதனால் தமிழக அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்து உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பினால் இன்று 5 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? இதற்காக ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுமா? எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.