கொரோனாவைத் தடுக்கும் புரதம்: முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்!!!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

 

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் வேகமாகப் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனாவை தடுக்கும் புரதத்தைக் கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கொரோனாவை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அதன் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாகவும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் தகவல் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனங்களோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவைத் தடுக்கும் புரத ஆய்வில் விரைவாக ஆய்வுமுடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் எளிதாக கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விடலாம் எனவும் துணைவேந்தர் நம்பிக்கை அளித்திருக்கிறார்.

ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்பது தடுப்பூசி கண்டுபிடிப்பு முறையில் ஒரு மேம்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது. இம்முறை அடிப்படையில் உயிர் தகவல் தொழில்நுட்பத் தொடர்புகளைப் பற்றியது. கொரோனா வைரஸ் கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தின் Antigens மற்றும் Epitopes ஐ தெரிந்துகொள்ளும் பொருட்டு வைரஸின் மரபணுவை பரிசோதனைக்கு உட்படுத்துவது ஆகும். இம்முறையில் கொரோனவிற்கு எதிராக செயலாற்றும் புரதத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவழித்து கொரோனா குறித்த தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தியிருக்கும் இந்த சோதனை பலராலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.