கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் புதிய குழப்பம்!!! இது தடுப்பூசி ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்துமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நாவல் SARS-Covid-2 வைரஸ் பரவும் வேகமும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் மாறுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். எனவே கொரோனா தீவிரம் அடைவதற்கும் பரவும் விதத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரம் பெற்றிருக்கிறது. காரணம் GISAD தரவுத்தளத்தின் கருத்துப்படி கொரோனா வைரஸில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரபணு வரிசைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கொரோனா வைரஸ் என்பது 11 வகைகளைக் கொண்டது என இந்திய விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுகளில் தெளிவுபடுத்தி இருந்தனர். மனித சுவாசப் பாதைகளில் காணப்படும் செல்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 புரதத்தை பற்றிக்கொள்வதற்கு வசதியாக கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. புதிய கொரோனா வைரஸின் A2a வகைதான் தற்போது அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் இந்திய விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். அதோடு கடந்த வாரத்தில் புதிய 53 வகை கொரோனா மரபணு வரிசைகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளியிட்டனர்.
இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் ஆய்வகங்களில் புதிய கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான புதிய மரபணுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதில், அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் கொரோனாவின் வீரியம் கொண்ட ஒரு புது மரபணு வரிசை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. Mutant D614G என்ற மரபணு வரிசை அந்தப் பகுதியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் அனைத்து நாட்டு விஞ்ஞானிகளுக்கும் தெரிவிக்கப்பட்டதா என்பதைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
பிரிட்டனில் உள்ள கொரோனா நோயாளிகளிடம் இந்த புதிய மரபணு வரிசை மாற்றங்கள் குறித்து செய்யப்பட்ட பகுப்பாய்வில் Mutant D614G மரபணு வரிசை அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி பிராங்கோயல் பலூக்ஸ் “நூற்றுக்கணக்கான புதிய கொரோனா மரபணு வரிசைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதில் Mutant D614G என்பது அதிக வீரியம் கொண்டதாக இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா மரபணு வரிசை மாற்றங்கள் நோய்த் தாக்கத்தில் புதிய குழப்பதை ஏற்படுத்துமா என்பதைக் குறித்த ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பிறழ்வு அதாவது மாற்றம் என்பது இயல்பானதுதான் எனவும் சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் மரபணு மாற்றங்கள் இயல்பாகக் கருதப்பட்டாலும் அதை எதிர்க்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இது கடும் பிரச்சனையை ஏற்படுத்தும் என தற்போது விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்மாறாக “கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட மரபணு பகுப்பாய்வின் படி இதுவரை உலகில் ஒரே ஒரு கொரோனா வைரஸ்தான் பரவிவருகிறது” என கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஆக, கொரோனா மரபணு வரிசை, வகை போன்ற விடயங்களில் விஞ்ஞானிகளிடையே கடும் குழப்பங்கள் நிலவி வருவதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் University College of London மேலும் புதிய 198 கொரோனா வைரஸ் மரபணுவை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய விவரங்களை GISAD தரவுத்தளத்தில் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அடிப்படையில் எந்தவொரு வைரஸ் நோய்த்தொற்றும் பரவும் வேகத்தில் சிறிய மாற்றங்களை வெளிப்படுத்தவே செய்யும் அது இயல்புதான், தற்போது பரவும் வேகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைக் குறித்து விரிவான ஆய்வுத் தேவை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸில் திடீரென்று மரபணு மாற்றம் ஏற்படுவதால் இந்த மாற்றங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. இதுவரை உலகில் நடத்தப்பட்டு வரும் அனைத்து தடுப்பூசி ஆய்வுகளும் கொரோனாவின் பந்துமுனை போன்ற கூர்மையான புரதத்தைத் தாக்கி அழிக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் மரபணு மாற்றத்தினால் கொரோனாவின் கூர்மையான பந்துமுனை புரதம் மாற்றியமைக்கப்படும் போது கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டிவரும் என சில விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்ந்து புதுப்புது மரபணுக்களை ஏற்படுத்தி வரும்போது கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிகள் செயல் இழந்து போவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலைமையைச் சமாளிக்க முதலில் கொரோனா மரபணு மாற்றங்கள் எந்தவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments