உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு!!! விளைவுகள் எப்படி இருக்கும்???
- IndiaGlitz, [Friday,May 15 2020]
பங்களாதேஷில் அமைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா இன மக்களுக்கான அகதிகள் முகாமில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செய்தியை WHO உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் முகாம்களில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என்றும் அச்சமும் எழுப்பப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மர் நாட்டில் நடைபெற்ற இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக அண்டை நாடுகளுக்கு ரோஹிங்கியா இன மக்கள் ஒட்டு மொத்தமாக இடம் பெயர்ந்தனர். இந்த மக்களின் இடப்பெயர்வை குறித்து அண்டை நாடுகளில் மறுப்பு தெரிவிக்கப் பட்டாலும் அவர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. மியான்மர் இராணுவம் இந்த மக்கள் மீது நடந்து கொண்ட கண்டிப்பு பற்றி உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள முகாமில் மட்டும் 1 மில்லியன் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த முகாமில்தான் கொரோனா வைரஸ் உறுதிப் படுத்தப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த போதே ரோஹிங்கியா இன மக்களின் குடியிருப்புகள் பற்றியும் அவர்களது சுகாதார மேம்பாடு குறித்தும் பல்வேறு தரப்புகளில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது. தற்போது பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டு தனிமையில் வைக்கப் பட்டுள்ளனர். இதனால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைளை உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமானால் நிலைமை என்னவாகும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்றும் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பங்களாதேஷில் கடந்த மார்ச் மாதத்தில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தது. இதுவரை 19 ஆயிரம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 283 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவலைத் தடுக்க அந்நாட்டில் மார்ச் 26 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.