சீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது
- IndiaGlitz, [Wednesday,January 22 2020]
சீனாவில் ஒரு வகையான நிமோனியாவை பரப்பும் கொரோனா வகையைச் சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது என சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் தற்போது உறுதி செய்துள்ளது.
சீனாவில் உள்ள வுகான் பகுதியில் இந்த நோய்த் தொற்றுக்களால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதுவரை 9 பேர் இறந்து உள்ளனர் எனவும் சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தன்மை கொண்டது என்பதால் வுகான் பகுதியில் 15 மருத்துவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸால் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமையில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் வுகான் பகுதியில் 2 பேருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. வுகான் பகுதியில் அசைவ உணவுகளின் சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாகச் சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது. எனவே இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் போது, பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
மிக குறுகிய கால அளவிலேயே இந்த நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் வுகான், பெய்ஜிங், குவாங்டன் போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. தற்போது வரை 440 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்குத் தெரிவித்துள்ளது. எபோலா, பன்றிக்காய்ச்சலைப் போன்று இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கும் உலக சுகாதார நிறுவனம் (WHO) சார்பாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்படும் என்றும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குத் திரும்பிய 30 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.
தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் சிலருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சீனாவில் உள்ள வுகான் மகாணத்தில் இருந்து திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனவே சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குத் திரும்பும் பயணிகளை ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் போன்ற நாடுகள் கடும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள்
ஒரே தன்மையுள்ள பல வைரஸ் கூட்டங்களைக் கொரோனா என்ற பெயரால் அழைக்கப் பட்டு வருகிறது. இந்த கொரேனா வைரஸ் வகையில் இது வரை 6 வைரஸ்கள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தி வந்தன. தற்போது இந்தத் தொகுதியில் 7 வதாக ஒரு புதிய வைரஸ் மக்களைத் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கிய வேகத்தில் ஒருவரின் நுரையீரலைப் பாதித்து விடுகிறது எனத் தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் நோய் தொற்று ஏற்படுவதால் வரும் காய்ச்சலைக் குணப்படுத்த இதுவரை மருத்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மனிதர்களிடம் இருந்து முடிந்த வரை தள்ளி இருப்பதன் மூலம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். புதிய வகை வைரஸ் என்பதால் இதனை குணப்படுத்தும் மருந்துகள் குறித்து தற்போது ஆராய்ச்சியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.