சீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வகை வைரஸால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் 3000 க்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் 13 எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பல நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹுபே நகரில் கொரோனா வகை வைரஸ் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. ஹுபே நகரில் மட்டும் கொரோனா வைரஸால் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர்.
சீனாவில் ஐந்து லட்சம் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சீனா இதற்காக தனி மருத்துவமனை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஜனவரி 25 ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப் பட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அந்நாட்டில் புத்தாண்டை சிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 15 பௌர்ணமிகளை அடுத்துக் கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டு குறிப்பிட்ட எந்த ஒரு தேதியிலும் அனுசரிக்கப் படுவதில்லை. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் புத்தாண்டு விடுமுறை நாட்களை அதிகரித்துள்ளது சீனா.
கொரோனா வைரஸ் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப் படும் வரையில் இறைச்சிக்காக விலங்கு மற்றும் கடல் உயிரினங்களின் வர்த்தகத்தைத் தடை செய்துள்ளது சீனா. வுஹான் பகுதியில் இருந்த இறைச்சி கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்த நிலையில் தற்போது சீனா இறைச்சி உணவுகளின் வணிகத்திற்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது. முன்னதாக வன விலங்கு மற்றும் வளர்ப்பு விலங்குகளால் பெறப்படும் இறைச்சி உணவுகளை நன்கு சமைத்தப் பின்பே உண்ணுமாறு சீன மருத்துவத் துறை மக்களைக் கேட்டுக் கொண்டது. தற்போது கடல் உணவுகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, இறைச்சி உணவுகளை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கடல் உயிரினங்களைக் கொண்டு செல்ல அந்நாட்டில் தடை விதிக்கப் பட்டுள்ளது. வளர்ப்பு விலங்கு மற்றும் வன விலங்குகளை வளர்க்கவோ அல்லது மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லவோ பாதுகாப்பினைக் கருதி பொது மக்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
சீனாவைத் தவிர்த்து தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான், மலேசியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம், கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இதுவரை சீனாவிற்கு வெளியே எந்த மரணமும் பதிவாகவில்லை.
இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களான டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகியவற்றில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளை கடும் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே இந்திய சுகாதாரத் துறை அனுமதித்து வருகிறது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்த 12 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பதாகச் சந்தேகித்து தனி அறைகளில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் வெளிநாடுகளில் இருந்து இந்திய திரும்பிய யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
சீனாவில் உள்ள இந்திய மாணவர்கள் அவர்களின் தங்கும் இடங்களிலேயே பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக பல மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com