சொன்னா கேக்கனும்... முகக்கவசம் அணியாமல் வீறாப்பு காட்டிய அதிபருக்கு கொரோனா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரேசில் அதிபர் போல்சோனோரோவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பிரேசிலில் தற்போது உயிரிழப்புகள் உச்சத்தை எட்டியிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் அதிபரின் கொரோனா வைரஸ் பற்றிய பிரச்சாரங்கள்தான் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப் பட்டு வருகின்றன. கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் “புதிய வைரஸ் ஒரு காய்ச்சல் போன்றதுதான்” என்ற கருத்தை அதிபர் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் “கொரோனா எங்கே இருக்கிறது காட்டுங்கள், இங்கே இருக்கிறதா?” என செய்தியாளர்களைப் பார்த்து விளையாட்டாக கேட்டார். அதைத்தவிர ஊரடங்கினைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிய சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.
இப்படி அதிபர் கொரோனா வைரஸ் தொற்றை குறைத்து மதிப்பிட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டதால் மக்கள் கட்டுப்பாட்டை இழந்தனர் என்று அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. கொரோனா ஊரடங்கினால் மக்கள் தொடர்ந்து வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விடும். கொரோனாவை விட பொருளாதார நெருக்கடி மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்ற நம்பிக்கை பேச்சை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக மேற்கொண்டார்.
நாட்டு மக்களுக்கு வெளியே சுதந்திரமாக நடமாடும் சுதந்திரத்தை வழங்கிய அதிபர் தொடர்ந்து தானும் முகக்கவசம் போன்ற என்ற பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் பல இடங்களுக்குச் சென்றுவந்தார். அதிபரின் இச்செய்கைக்கு அபராதம் விதிக்குமாறு வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிபதிகள் அதிபர் போல்சோனோரோ முகக்கவசம் இல்லாமல் வெளியே சென்றால் நாளொன்றுக்கு 390 டாலர் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தனர். நீதிமன்றத்தின் எச்சரிக்கையும் மீறி வெளியே செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் சென்றுவந்த அதிபருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது. அலுவலகம் வருவதையும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அதிபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து பிரேசில் அதிக பாதிப்பு எண்ணிக்கையைக் கொண்டு இருக்கிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகமாகி இறப்பவர்களை புதைக்க இடமில்லாமல் ஏற்கனவே புதைத்து 3 வருடங்களாகிய கல்லறைகளைத் தோண்டி அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் கொரோனாவால் உயிரிழந்த உடல்களைப் புதைக்கும் செயலில் அந்நாட்டு சுகாதாரத் துறை இறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்நாட்டில் 16,74,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு இருப்பதாக ஹான் ஹாப்பின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சொல்கின்றன. உயிரிழப்பு 66,868 ஆக பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout