கொரோனா; தேசியம், இனம் என்றெல்லாம் பார்க்காது!!! மோதல்களைக் கைவிடுங்கள்!!! ஐ.நா. வலியுறுத்தல்!!!
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
“நம் உலகம் கொரோனா என்ற பொது எதிரியை எதிர்க்கொண்டு வருகிறது. அது தேசியம், இனம், நிறம் போன்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காது. அனைவரையும் இடைவிடாமல் தாக்கி அழிக்கும் தன்மைக்கொண்டது. எனவே இந்நேரத்தில் நாடுகளுக்கிடையிலான மோதல்களைக் கைவிடுங்கள்” என்று ஐ.நா. சபையின் தலைவர் Antonio Guterres கூறியிருக்கிறார்.
மேலும், கொரோனா வைரஸ் “உலகில் இதுவரை இருந்த முட்டாள் தனத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது. எனவேதான் உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்” எனவும் ஐ.சபையின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினால் 428,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19,152 உயிரிழப்பும் நிகழ்ந்து இருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் தங்களுக்குள் வேறுபாடுகள், மோதல்கள், விவாதங்களைத் தவிர்த்துவிட்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையின் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்
.கொரோனா பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய ஐ.நா. சபையின் தலைவர், இச்சூழலில் உலக நாடுகள் ஆயுத மோதலை நிறுத்திவிட்டு உண்மையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரைத் தொடங்கவேண்டும். பெண்கள், குறைபாடு உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், அகதிகள் ஆகியோர் போரினால் பாதிக்கப்படுவதை விட தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உண்மையான போரைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், துப்பாக்கிகளை அமைதியாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பீரங்கிகள், வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். உலக மக்களின் உயிர்களைக் காப்பதற்காக உங்களது கதவுகளைத் திறந்து வையுங்கள். கொரோனா பாதிப்புகள் அதிகம் பரவியுள்ள பகுதிகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுங்கள். நோயை பின்னுக்குத் தள்ளுவதற்கான கூட்டு அணுகுமுறைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் ஐ.நா. சபையின் தலைவர் Antonio Guterres தனது உரையில் பேசியிருக்கிறார்.
உலகம், கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது ஐ.நா. சபையின் தலைவர் வேறுபாடுகளை கைவிட்டு உண்மையான போரைத் தொடங்குங்கள் எனப் பேசியிருப்பது, உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிவகை எனப் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.