என்று தணியும் கொரோனா!!! எப்போது முடிவுக்கு வரும்??? தொடரும் கேள்விகளுக்கு விளக்கம்!!!

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

 

ஒரு பெருந்தொற்றை எப்படி அளக்கலாம் என்பதைப் பற்றிய கணக்கீட்டு வடிவத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் உருவாக்கினார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் உலகின் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவிவரும் இந்நேரத்தில் அதன் விளைவுகள் எப்படி இருக்கும், எப்போது இது முடிவுக்கு வரும் எனப் பல கேள்விகள் எழுவது இயல்பானதுதான்.

அடிப்படையில் உலகம் முழுவதும் பரவிவரும் ஒரு பெருந்தொற்று அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும், அது எப்போது முடிவுக்கு வரும் என்பதைப் பற்றியெல்லாம் மதிப்பீடு செய்வது கடினம் என நினைக்கலாம். ஆனால் அதுவும் சாத்தியம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதித்து காட்டியிருக்கிறார்.

வில்லியம், ஒரு பெருந்தொற்று எப்படி ஆரம்பிக்கும் அது எப்படி முடியும் என்பதை அளவிடுவதற்கு “மணிவடிவ வளைவு கணக்கீட்டு முறை” என்ற மதிப்பீட்டு முறையைப் பயன்படுத்தி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய பல பெருந்தொற்று நோய்களின் விளைவுகளை இந்த மதிப்பீட்டு முறையின்படி அவர் கணித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த அளவீட்டு முறையை கொரோனா பரவலுக்கும் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த உலகம் இருக்கிறது. காரணம் அளவே இல்லாமல் உலகின் எல்லா பரப்புகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா நோய்த்தொற்று எப்போது முடிவுக்கு வரும், அந்த முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அரசுகள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

வில்லியம் ஃபார் அவர்களின் “மணிவடிவ வளைவு கணக்கீட்டு முறை”யை அதற்கு பின்பு பல அறிஞர்கள் மெருகேற்றியிருக்கின்றனர் என்றாலும் அடிப்படை அவரிடம் இருந்துதான் தொடங்குகிறது. இதற்கு முன்னர் உலகத்தில் பெரியம்மை, காலரா, போலியோ, மலேரியா போன்ற நோய்த்தொற்றுகள் தோன்றி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நோய்கள் ஆரம்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து தற்போது அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இன்னும் சில நோய்களை தடுப்பூசி கண்டுபிடிக்காமலே கட்டுப்படுத்தவும் முடிகிறது. எய்ட்ஸ், சார்ஸ் போன்ற நோய்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லியம் ஃபார் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் மாகாணத்தில் பரவிய தட்டம்மையால் 1837 – 1939 வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் இறப்பில் ஒரு மாதிரி வடிவம் (Pattern) இருப்பதாக மதிப்பிட்டார். அதாவது தட்டம்மை பெருந்தொற்று ஒரு ஆலய மணி வடிவத்தைப் போன்று கிடுகிடு வென உயர்ந்து பின்னர் எப்படி உயர்ந்ததோ அதே வேகத்தில் மீண்டும் குறைந்து விடும் என மதிப்பிட்டு இருந்தார். அவரது கணிப்புப்படி 1837 இல் பரவத் தொடங்கிய தட்டம்மை உயர்ந்த வேகத்தில் இருந்து மீண்டும் 1839 இல் சரியத் தொடங்கியது. தட்டம்மைக்குப் பிறகு விலங்குகளுக்குப் பரவிய கொள்ளை நோயிலும் இதேபோல மாதிரி வடிவத்தை அவர் கணித்து இருந்தார். 1865 இல் கால்நடைகளுக்கு பரவத் தொடங்கிய கொள்ளை நோய் பரவிய வேகத்தில் சரியவும் தொடங்கியது.

எய்ட்ஸ் ஒரு பெருந்தொற்றாக ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவவில்லை என்றாலும் அதன் பாதிப்பு தொடந்து இருக்கத்தான் செய்கிறது. இதுவரை இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்று அடுத்த 6 வருடத்தில் 30,000 பேருக்கு பரவியது. இதே வேகத்தில் பரவினால் 1991 ஆம் ஆண்டு 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு பரவிவிடும் என்றும் 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் வில்லியம் ஃபார் சொன்னதுதான் நடந்தது. அதாவது 1981 இல் பரவத் தொடங்கிய எய்ட்ஸ் நோய் 1988 க்குப் பின்னர் படிப்படியாக சரியவும் செய்தது. 1990 இல் எய்ட்ஸ் நோயை முழுமையாக கட்டுப்படுத்தவும் முடிந்தது. இதேபோல வேறு பல நோய்களிலும் பெருந்தொற்று பரவத் தொடங்கும்போது கிடுகிடுவென உயருவதும் பின்னர் கடும் விளைவுகளை ஏற்படுத்தியப் பின்பு சரிவதும் இன்றுவரை நடக்கிறது. எனவே கொரோனா விஷயத்திலும் இதே போல சரியத் தொடங்கும் காலம் எப்போது வரும் எனத் தானாக கேள்வி எழலாம்.

கொரோனா காலத்திலும் பல உலக நாடுகள் வில்லியம் ஃபாரின் Flattening the curve என்ற வார்த்தையைத் தான் அடிக்கடிப் பயன்படுத்து கின்றனர். அதாவது கொரோனா போன்ற நோய்த்தொற்றில் வெறுமனே மருத்துவர்கள், விஞ்ஞானிகளின் உதவி மட்டுமல்லாது இதுபோன்ற கணிதவியலாளர்களின் உதவியும் தேவைப்படுகிறது. வில்லியம் ஃபார் கூறியபடி ஒரு நோய்த்தொற்று உயர்ந்து கொண்டே செல்லும் வேகத்தில் குறையத் தொடங்கும். அதற்கு ஆயத்தமான ஏற்பாடுகளை, ஊரடங்குத் தளர்வுகளை இந்த கணக்கீட்டின் படிதான் பல அறிஞர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா விஷயத்தில் நோய்த்தொற்று உயர்ந்து இருக்கிற விகிதம், கொரோனாவினால் இறந்தவர்களின் விகிதம் உயர்ந்து இருக்கும் நாளுக்கும் இடையில் 21-28 நாட்கள் இடைவெளி இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த விகிதங்களை கண்டறிய முதலில் பரிசோதனையை முழுமையாக நடத்தி வேண்டும். கொரோனா விஷயத்தில் இந்த மதிப்பீடுகளை செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம் எனவும் சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் ஒரு நோய்க்கு எதிராக அந்நாட்டு சுகாதாரத்துறை மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கையைப் பொறுத்து அந்த நோயின் தீவிரம் மட்டுப்படுத்தப்படும். இதற்கான முழுப்பொறுப்பும் ஒரு நாடு மேற்கொள்ளும் நடவடிக்கையில்தான் இருக்கிறது. போதுமான அளவிற்கு சமூகவிலகலைக் கடைபிடித்து, முறையான சுகாதார வசதிகள் செய்துகொடுக்கும் பட்சத்தில் கொரோனாவின் ஆலய மணி வளைவு மிக வேகமான சரியத் தொடங்கும். அப்படி இல்லாமல் மெதுவான வேகத்தில் பணியாற்றினால் மெதுவான வேகத்தில் சரியத் தொடங்கும்.

உயர்ந்து நிற்கும் கொரோனா எண்ணிக்கையை (அதாவது ஆலய மணி போன்ற கூம்பை) சுகாதார நடவடிக்கையினால் மீண்டும் தட்டையாக்க முடியும். வளைவு தட்டையாக்கப்படும் போது அது கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். அடுத்து சிறு மடுவாக ஒருகாலத்தில் அது முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதுவரை பரவிய அனைத்துத் தொற்றும் பரவிய வேகத்தில் சூறாவளி போன்று விளைவுகளை ஏற்படுத்தத்தான் செய்திருக்கிறது. அதற்கு எதிராக மக்களும், சுகாதரத் துறை, அரசுகள் எல்லாம் போராடி அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அடுத்து சின்ன மடுவாக மாற்றியிருக்கிறார்கள். கிடுகிடுவென உயரும் ஆலயமணி ஒரு காலத்தில் சரியத் தொடங்கத்தான் செய்யும். அதற்கு முறையான வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி இந்து தமிழ்