95 வயது இங்கிலாந்து ராணியாருக்கு கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Monday,February 21 2022]
இங்கிலாந்து மகாராணியார் 2ஆம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாக பக்கிம்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது. 95 வயதான மகாராணியார் இங்கிலாந்து மகாராணியாகப் பதிவேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை சமீபத்தில் கோலாகலமாகக் கொண்டாடினார்.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ்க்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டது. இது நடைபெற்ற 2 நாட்களுக்கு முன்பு சார்லஸ், தனது தாயை வின்ட்சர் பகுதியில் சென்று சந்தித்து இருந்தார். இதனால் எலிசபெத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அறிகுறிகள் எதுவும் இல்லாத காரணத்தால் மகாராணி எலிசபெத் தன்னை அரண்மனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்நிலையில் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல உலகநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.