கொரோனா வைரஸ் பரவல் : சர்வதேச அவசர நிலை பிரகடனம் – WHO அறிவிப்பு

 

இந்தியா உட்பட கொரோனா வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவியுள்ளது. இதனை அடுத்து உலகச் சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.  சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, ஐ.நா. சபையின் அவசர காலக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து விவாதிக்கப் பட்டது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஐ.நா சபையின் அவசர காலக்குழு உலகச் சுகாதார நிறுவனத்திற்குச் சில பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்தப் பரிந்துரையின்படி இன்று முதல் உலகம் முழுக்க பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதற்கு முன்பாக ஐந்து ஐறை மருத்துவ ரீதியிலான சர்வதேச அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

2009 இல் அமெரிக்காவில் பரவிய எச்1என்1 (H1N1) ஃப்ளு வைரஸ், 2014 இல் ஆப்கானிஸ்தான் காமரூனில் பரவிய போலியோ வைரஸ், 2014 இல் வட ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா வைரஸ், 2016 இல் பிரேசிலில் பரவிய ஜிக்கா வைரஸ், 2019 இல் வட ஆப்பிரிக்கா (காங்கோ) வில் பரவிய எபோலா  வைரஸ் என இது வரை ஐந்து முறை சர்வதேச அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஒரு இடத்தில் தோன்றுகிற வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகவே இத்தகைய நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், “இந்த அவசர நிலை அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் நடந்து வரும் சம்பவங்கள் மட்டுமே காரணம் அல்ல. உலகின் மற்ற நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனாவைத் தவிர்த்து 18 நாடுகளில் 98 பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாக முயற்சி செய்து கொண்டு வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் 170 பேர் இறந்துள்ளனர், மேலும் 7.000 பேருக்கு இந்த வைரஸ் தொற்றின் பாதிப்புகள் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.