18 ஆயிரமாக உயர்ந்த கொரோனா நோயாளிகள்: ஊரடங்கையும் மீறி உயரும் எண்ணிக்கை
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கையும் மீறி இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 18,601ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 559லிருந்து 590ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842லிருந்து 3,252ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,81,165ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 792,759 பேர்களும், ஸ்பெயினில் 200,210 பேர்களும், இத்தாலியில் 181,228 பேர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு 20,852 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.