கொரோனா அறிகுறி நோயாளி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து இதுவரை 150க்கும் மேற்பட்டோர்களை தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சமீபத்தில் டெல்லிக்கு திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்றாலும் அவர்களிடம் அவரது உறவினர்கள் அவ்வப்போது பேச அனுமதிக்கவேண்டும் என்றும் இது போன்ற மன உளைச்சல் ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்